cinema

img

“பனை மரக் காடே, பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்ப்போமா?”

“அல்கராஸ்”(ஸ்பெயின்)- (2022)-(MUBI) அன்னை நிலமே, ஆதிமனிதனின் தாய் மடி. குடியிருப்பு, விளைநிலம் இடு காடு என்று நிலம் மனித இருப்பின் அடையாள மாகவும் திகழ்கிறது. பண்டைய காலத்திலிருந்து இன்றுவரை மண்ணுக்கான போர்களும், போராட்டமும் தொடர்ந்து கொண்டே இருக் கிறது. ஏனெனில் நிலம் அதிகாரத்தை யும் ஆதிக்கத்தையும் தருவதாகும்.இன்றைய, நவீன அசுரர்களான கார்ப்ரேட்களின்” நிலக்குவிப்பு”சகாப்தத்தில்,தங்கள் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு உழவர் குடும்பத்தைப் பற்றிய உண்மை நிகழ்வை,அபாரமான திரை மொழியில் வெளிப்படுத்துவதே, “அல்கராஸ்” (Alcaraas)என்ற ஸ்பானியப் படம். தலைமுறைகள் கண்ட முதியவர் ரொசால்ஜியோ. அவர் மகன் குமே; அவன் மனைவி, பதின்ம வயதுடைய மகன், மகள் மற்றும் ஐரிஸ் என்ற பெண் பிள்ளை. இக்குடும் பம் வாழையடி வாழையாக, பீச் மரப் பண்ணை யைப் உரிமைகொண்டாடி பேணிப் பிழைத்து வருகிறது. (பீச் மரங்களில் விளையும் குழிப் பேரிப் பழம் ஆப்பிள் பழத்தினை ஒத்த தோற்றத் தையும், குணத்தையும் கொண்டதாகும். பழக் கலவைகள், பழரசங்கள் தயாரிக்கவும், கேக் தயாரிக்கவும் பயன்படுகின்றன.)  ஒருகாலத்தில் ஸ்பெயினில் நிலக்கிழார் களுக்கு எதிரான உள்நாட்டுப் போரின் போது, ரொஸால்ஜியோவின்  முன்னோர்கள், நிலக் கிழார் பினியோல் குடும்பத்தை பாதுகாத்துள்ள னர். அதற்கு நன்றிக்கடனாக பினியோல் குடும்பத் தாரால், ரொஸால்ஜியோவின் குடும்பத்திற்கு வாய்மொழியாக வழங்கப்பட்டதே இப் பண்ணை நிலங்கள். இதனால் இவர்களிடம், இந்நிலத்தை உரிமை கொண்டாடும் ஆவணம் எதுவுமில்லை.

இந்த நிலத்திற்கு வாரிசுரிமை கொண்ட ஜுனியர்  பினியோல் என்பவன், பண்ணைநிலத்தை சூரிய மின்னுற்பத்தி நிறு வனத்துக்கு விற்றுவிடுகிறான். பண்ணையை விட்டு ரொசால்ஜியோ குடும்பம் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவர்கள் பிள்ளைகளைப் போல் பேணி வளர்த்த பீச்மரங் கள் இவர்கள் கண் முன்னே வெட்டி அழிக்கப்படு கின்றன. வாழ்க்கை நிலையிலிருந்தே மனித உணர்வுகள் உருவாகின்றன. நிலத்துடனான, இவர்களின் இதயம் தோய்ந்த உணர்வு அறுபடும் அவலத்தை, மனதைத்தொட்டு வருத்துகிறது “அல்கராஸ்”என்ற படைப்பு. பயனற்று விடப்பட்ட பழைய காரொன்றில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை சோலார் கம்பெனியின் கிரேன் இயக்குபவர் விரட்டி, காரை அப்புறப்படுத்த, அவர்கள் காரை ஏக்கத்தோடுப் பார்த்து நிற்கும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. இறுதிக் காட்சியில் கம்பெனியின் புல்டோசர் கள் பீச்மரங்களைப் பெயர்த்து அழிப்பதை ரொசால்ஜியோவின் குடும்பம் வேதனையோடு கையறு நிலையில் பார்த்துக்கொண்டு நிற்கிறது. அப்போது ஒலிக்கின்ற, குழந்தைகளின் பாடலான,

“கூலிக்காக உழைப்பதாய் இருந்தால் 
சூரியன் தினந்தோறும் 
கோழிகூவ எழுந்துவராது;
பண்ணையாரே தன்கையால்
அறுவடைக்க வேண்டுமெனில்
இந்நேரம் பட்டினியால் 
மடிந்திருப்போம்;
இனிய குரலெடுத்து
நான் எனக்காகப் பாடவில்லை;
விடிகாலைப் பொழுதை,
விடிகின்ற புதுநாளை,
நயந்து நான் பாடவில்லை;
என்பொருட்டு உயிர்நீத்த
நண்பனைப் பாடுகிறேன்;
கருக்கறுவாள் பிடித்த தாத்தா
கதிரறுத்துக் கட்டுகிறார்;
கதிரடித்துத் தூற்றிக் 
கதிர்மணிகள் தேற்றுகிறார்;
இனிய குரலெடுத்து
நான் எனக்காகப் பாடவில்லை;
பொலிவான வானத்தை,
பூங்காற்றைப் பாடவில்லை;
தாங்கிப் பிழைப்பூட்டும்
தாய்நிலத்தைப் பாடுகிறேன்”

என்ற பாடல், பிரிவின் பெருவலியை உணர்த்துகிறது. விளைபொருளுக்கான கட்டுபடியான விலை கோரி, விளைவித்த பீச் பழங்களை சாலையில் கொட்டி, கனரக வாகனங்களை ஏற்றி அழிக்கின்ற உற்பத்தியாளர்களின் போராட்டம்; ஆனால் கார்ப்பரேட் ஆதரவாளர் பினியோல்,” சூரியன் மின்னுற்பத்திக்கு மாறினால், குறைந்த உழைப்பு; அதிக லாபம்”எனக் கூறுவது” பழங்கள் விலை மதிப்பற்றவை.”என்ற  பதாகை யோடு வெட்டப்படும் போராட்டக் காட்சி; எனப் பலப் பல அடுக்குகளில் விரிகிறது இப்படம். குமேயின் மூன்று பிள்ளைகளின் பார்வை யிலும், கேள்விகளிலுமே, படம் நகர்கிறது.             பீச் மரங்களுக்கிடையே வாழும் முயல்கள் ஆங்காங்கே இறந்து கிடப்பதை பார்க்கும் ஐரிஸ் உள்ளிட்ட குழந்தைகள், அதனை அவர்களது கலாச்சார முறைப்படி அடக்கம் செய்கிறார் கள். ஆனால் பீச் மரங்கள் அழிக்கப்படும்போது, இறந்த  முயலினை தூக்கி எறிவார்கள். விவசா யத்தை அழித்தால், பண்பாட்டு கலாச்சாரம், தானே அழியும் என்பதை இக்காட்சி பூடக மாக உணர்த்துகிறது. வாழ்க்கை மனித உணர்வு களை உருவாக்குகிறது. இந்த உணர்வுகளே பண்பாட்டை உருவாக்கும். ரோஜரும் அவனது தங்கை மரியோனாவும், தங்கள் நிலத்தைப் பறித்த பினியோல் வீட்டு வாசலில் இறந்த முயல்களை போட்டுத் தங்களது எதிர்ப்பை நூதன முறையில் காட்டு கிறார்கள்.”வாழ்விடம் இழந்த முயல்களுக்கு, மனித வாழ்விடமே, கல்லறை” என்பதை இக்காட்சி தெளிவாக்குகிறது. பீச் பழங்களின் கடைசி அறுவடை முடிகிறது.மறுநாள் மரங்கள் அழிக்கப்படவுள்ள சூழலில், தாத்தா ரொஸால்ஜியோ அன்றிரவு முழுவதும், தனிமையில் ஒவ்வொரு மரத்தையும் உணர்வு தொட்டு, கண்ணீரின்றி அழுகின்ற காட்சி, கண்ணீரை வரவழைக்கக் கூடியதாகும்.   பீச் மரங்களுக்குள், கள்ளத்தனமாக வளர்க்கப்படும் மரிஜூவனா போதை செடி; சூரியன் மின்னுற்பத்தி நிறுவனம்,பீச் பழ மர விவசாயத்திற்குள் ஊடுருவுவதன் உருவக மாகும்.  

இப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இப்படத்தில் நடித்த அனைவரும் தொழில் முறை நடிகர்கள் அல்ல.கதை களப் பகுதி யில் வாழ்ந்தவர்களையே தேர்ந்தெடுத்து, மூன்று மாதம் பயிற்சியளித்து நடிக்க வைக்கப்ப பட்டுள்ளனர்.அனைவரும் கதாபாத்திரங் களாகவே வாழ்ந்துள்ளனர். படத்தை பெண் இயக்குநர் கார்லா சைமன் சிறப்பாக இயக்கியுள்ளார். குமேயின் குடும்ப விழாவைத் தவிர்த்து பிற அனைத்து காட்சிகளிலும், அனைத்து கதாபாத்திரங்களும் இறுக்கமான முகத்தோ டும், எதையோ பறி கொடுத்தவர்களின் மன நிலையிலே நடித்துள்ளனர்.குறிப்பாக,குமே, டோலர், மகள்கள் மரியோனா, ஐரிஸ்,மகன் ரோஜர் ஆகியோர் அபூர்வ நடிப்பைத் தந்துள்ள னர். படத்தின் கடைசி பாடலுக்கான இசையைத் தவிர்த்து, பின்னணி இசையே கிடையாது.மரங்களின் அசைவு,காற்று,ஆகிய இயற்கை ஒலிகளே படத்தின் கதையோடு மட்டுமின்றி நம்மோடும் உறவாடுகிறது. இயற்கை வனப்புடைய நிலத்தையே, மையப்பாத்திரமாகப் இயக்குநர் படைத்துள் ளார். எனவே பல நீண்ட காட்சிகளை(Long shots) கட்டமைத்து,நிலத்தை நம்மோடு ஒன்ற வைத்தும், பிரித்தும் மாயவித்தை நிகழ்த்தி யுள்ளார். படத்தொகுப்பும்,ஒளிப்பதிவும் மிகப்பெரும் பங்காற்றியுள்ளது.  ஸ்பானிஷ் திரைப்படத் தயாரிப்பாளரும், பிரபல இயக்குன ருமான, பெட்ரோ அல்மோடோவர், இப்படத்தை “தலைசிறந்த படைப்பு”என வர்ணித்துள்ளார். இப்படம் 2022 பெர்லின் உலகத் திரைப்பட விழாவில் தங்கக் கரடி விருது பெற்று, உலகின் கவனத்தை ஈர்த்த படம்.